சென்னை: அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் பாஜக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அந்தத் தொகுதிகளில் தென்சென்னை, வேலூர், கன்னியாகுமரி, நீலகிரி முதலானவை உள்ளடங்கும்.
சென்னை, தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில், கட்சியின் மையக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
மையக் குழுக் கூட்டத்தில், அந்த ஒன்பது தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், வாக்குச் சவாடிக் குழுவை வலுப்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
தேர்தலில் கூட்டணி தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
“தமிழகத்தில் பாஜக ஆட்சியை ஏற்படுத்துவது, களத்தில் உள்ள பொறுப்பாளர்களின் கருத்துகள், ‘என் மண், என் மக்கள் யாத்திரை’ குறித்த குறிப்புகள் போன்றவற்றை விவாதித்தோம்.
“இதுவரை ஒன்பது தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த இருக்கிறோம். வரும் நாட்களில் 39 தொகுதிகளிலும் அதேபோல் கவனம் செலுத்துவோம்.
தொடர்புடைய செய்திகள்
“நாட்டில் எங்கேயும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை மட்டுமின்றி, சொத்துகள் பறிமுதலும் நடந்தேறி வருகின்றன.
“பொது மக்களின் பணம் தனியாரின் பணமாக மாறியிருப்பது என்பது தெளிவாக தெரிகிறது,” என்று அண்ணாமலை தெரிவித்தார்.