உடல் உறுப்பு தானம்: உறுதிமொழிப் பத்திரம் அளித்த 36,472 நன்கொடையாளர்கள்

2 mins read
4c8c81f9-d4fb-415f-b4c0-869ce036bb2d
ககன்தீப்சிங் பேடி. - படம்: ஊடகம்

சென்னை: உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டு பேசிய அவர், உலகிலேயே ஸ்பெயின்தான் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி நாடாகத் திகழ்கிறது என்றார்.

“இந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில், உடல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் ஸ்பெயினாக திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் இதுவரை 36,472 நன்கொடையாளர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழிப் பத்திரம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

“தமிழகத்தில் உள்ள 169 மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் சேகரிக்கப்பட்டு வெற்றிகரமாக மாற்று அறுவைசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்தாண்டு மட்டும் 128 நன்கொடையாளர்கள் மூலம் 733 பேர் பலன் அடைந்துள்ளனர்.

“53 பேருக்கு இதயமும் 84 பேருக்கு நுரையீரலும் 114 பேருக்கு கல்லீரலும் 228 பேருக்கு சிறுநீரகமும் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது,” என்றார் ககன்தீப்சிங் பேடி.

உடல் உறுப்பு தானம் மூலம் ஏராளமான மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்ட அவர், இளையர்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியம் என்றார்.

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உணர்ந்து அனைவரும் விலைமதிப்பற்ற உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் தற்போது 6,205 பேர் சிறுநீரகத்துக்காகவும் 443 பேர் கல்லீரலுக்காகவும் 75 பேர் இதயத்துக்காகவும், 62 பேர் நுரையீரலுக்காகவும் என மொத்தம் 6,785 பேர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்ற சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்