விருதுநகர்: ராஜபாளையத்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமி, தொடர்ந்து இரண்டு மணி நேரம் கண் இமைக்காமல் தாக்குப்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ராஜபாளையம் நகர்மன்றத் தலைவி பவித்ரா ஷியாம் மகள் அனிஷ்கா தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இச்சிறுமிக்கு எந்தப் பொருளாக இருந்தாலும் அதை கண் இமைக்காமல் உற்றுப் பார்க்கும் திறன் உள்ளது. இதைக் கவனித்த அனிஷ்காவின் பெற்றோர், இத்திறனைப் பயன்படுத்தி தங்களுடைய மகளால் சாதனை படைக்க முடியும் என நம்பினர்.
கடந்த மூன்று மாதங்களாக ஒரு பயிற்சியாளரை நியமித்து அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 12ஆம் தேதி, ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற முயன்றார் அனிஷ்கா.
ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் இரண்டு மணி நேரம் விழிகளை இமைக்காமல் சாதனை படைத்தார்.
விழிகளில் கண்ணீர் வழிந்தோடிய போதும் அவர் அசரவில்லை. சிறுமிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

