தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாகை, காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

1 mins read
c1ce78ba-be01-46cc-b73f-2bc6e2a6597e
பயணிகள் கப்பல் சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. - படம்: ஊடகம்

நாகை: தமிழகத்தின் நாகை பகுதி முதல் இலங்கையின் காங்கேசன்துறை வரை இயக்கப்படும் பயணிகள் கப்பலின் சேவையைப் பிரதமர் மோடி அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.

ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருமுறை தொடக்க விழாவுக்கு நாள் குறிக்கப்பட்ட போதிலும், அது சாத்தியமாகவில்லை.

இந்நிலையில், காணொளி வசதி மூலம் பிரதமர் மோடி இச்சேவையை சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.

“இருதரப்பு நட்புறவை வலுப்படுத்துவதில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து முக்கிய மைல்கல்லாக இருக்கும்,” என்றார் பிரதமர் மோடி.

நாகப்பட்டினம் மற்றும் அதனை ஒட்டிய நகரங்கள் கடல் வணிகத்திற்குப் பெயர் பெற்றவையாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் துறைமுகம் பற்றிய பதிவுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தக் கப்பல் போக்குவரத்து சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் இளையர்களுக்கு பல புதிய வாய்ப்புகளையும் திறக்கும் என்றார் பிரதமர்.

“40 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. இதன் மூலம் நாகையில் இருந்து மூன்றரை மணிநேரத்தில் இலங்கையைச் சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.