சென்னை: மணல் கொள்ளையை தடுத்தபோது அரசு அதிகாரிகளைக் கொலை செய்ய முயன்ற கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அண்மைக்காலமாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி நிர்வாக அலுவலர் கருப்பசாமி என்பவருக்கு மணல் கடத்தல் குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் தனது உதவியாளர், இரு காவலர்களுடன் கொள்ளையர்களைத் தடுக்க விரைந்தார்.
அப்போது அவர்கள் மீது ஆற்று மணலைக் கொட்டியும், சரக்குந்தை ஏற்றியும் படுகொலை செய்ய கொள்ளையர்கள் முயன்றனர்.
இதுகுறித்து காவல்துறை விசாரித்து வரும் நிலையில், மணல் கொள்ளையை தடுக்க முயலும் நேர்மையான அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிகள் நடப்பதாக அன்புமணி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“பல இடங்களில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். ஈடு செய்ய முடியாத இயற்கை வளமான மணல் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதும் அதைத் தடுக்க எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படாததும் மிகவும் வருத்தமளிக்கிறது,” என்று அன்புமணி மேலும் தெரிவித்துள்ளார்.

