சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு யுபிஐ பரிவர்த்தனைச் சேவை மூலம் பணம் செலுத்தலாம்.
தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் ஆதார அட்டை இணைக்கப்பட்ட விரல் ரேகைப் பதிவு மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மின்னியல் பணப்பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்துவதற்கு சோதனைகள் நடைபெற்று வந்தன.
அதைத் தொடர்ந்து முதல் கட்டமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 1,700 நியாய விலைக்கடைகள் உட்பட மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 9,200க்கு மேற்பட்ட கடைகளில் மின்னியல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இனி பொதுமக்கள் ரேஷன்கடைகளில் உள்ள க்யூஆர் குறியீட்டை தங்கள் கைப்பேசியில் ஸ்கேன் செய்து தொகையைச் செலுத்த முடியும்.

