தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஞாயிறு நாயகன்

சாக்கு தைக்கும் சாமானியருக்குப் புல்லும் ஆயுதம்

4 mins read
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த திரு தர்மேந்திரன், 40. கீழே கிடக்கும் குடைக் கம்பி, அந்தக் கால டிங்டாங் கடிகாரத்தின் உடைந்த வில் பட்டை இவைதான் ஆயுதம்; நாளொன்றுக்கு ரூ.500 உறுதி என்கிறார் இந்தச் சாக்கு தைக்கும் சாமானியர்.
aa4827a1-54f7-441a-aa47-e254fdf740da
செம்பொன்னார்கோயில் பேரூரில் காமாட்சி என்ற சாக்கு மண்டியில் ‘தாட்’ பை தைத்துக்கொண்டிருக்கும் திரு தர்மேந்திரன்.   - படம்: எம். கே. ருஷ்யேந்திரன்
multi-img1 of 2

எம்.கே. ருஷ்யேந்திரன்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றார், கும்பகோணத்தைச் சேர்ந்த திரு தர்மேந்திரன் என்ற சாக்குப் பை தைக்கும் சாமானியர்.

“கீழே கிடக்கும் குடைக்கம்பி அல்லது சைக்கிள் சக்கரக் கம்பி; அந்தக் கால டிங்டாங் ஊசல் சுவர்க் கடிகாரத்தில் இருக்கும் உடைந்த சுருள் கம்பி இவை போதும். நாள் ஒன்றுக்குச் சராசரியாக ரூ.500 சம்பாதித்துவிடுவேன்,’’ என்று தன்னம்பிக்கையுடன் கூறிய திரு தர்மேந்திரனை மயிலாடுதுறை அருகே இருக்கும் செம்பொன்னார்கோயில் என்ற பேரூரில் சந்தித்தேன்.

அங்குள்ள காமாட்சி என்ற சாக்கு மண்டியில் அவர் சாக்குப் பைகளையும் பிளாஸ்டிக் சாக்குகளையும் சேர்த்து பெரிய பெரிய பைகளாகத் தைத்துக்கொண்டு இருந்தார்.

சாக்கு மண்டி உரிமையாளர்கள், பயன்படுத்திய பழைய சணல் சாக்குகளை, பிளாஸ்டிக் சாக்குகளை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சேலம், தருமபுரி போன்ற பகுதிகளில் இருந்து லாரி லாரியாக டன் கணக்கில் விலைக்கு வாங்கிக்கொண்டு வருகிறார்கள்.

அவற்றில் இருக்கக்கூடிய கிழிசல்களைத் தைத்துச் சரிப்படுத்துகிறார்கள். பிறகு சணல் சாக்குப் பை ஒன்றையும் பிளாஸ்டிக் சாக்குப் பை ஒன்றையும் சேர்த்துத் தைத்து பெரிய பையை உருவாக்குகிறார்கள். அவற்றுக்குத் ‘தாட்’ என்று பெயர்.

பருத்தி பயிர்செய்யும் விவசாயிகள் ஒரு தாட் ரூ.30 என்ற விலையில் அவற்றை வாங்கிச் செல்கிறார்கள். ஒரு தாட் பையில் 70 கிலோ பஞ்சை அடைக்கலாம்.

நான் பார்த்த சாக்கு மண்டிகளில் திரு தர்மேந்திரனுடன் சேர்ந்து நான்கு பேர் தாட் தைத்துக் கொண்டு இருந்தார்கள்.

‘‘ஒரு தாட் பை தைத்தால் கூலி ரூ.5. ஒரு நாளில் சராசரியாக 100 தாட் தைக்கலாம். ரூ.500 சம்பாதிக்கலாம்,’’ என்று திரு தர்மேந்திரன் கூறினார்.

“தமிழ்நாடு முழுவதும் செல்வேன். கைப்பேசி எண்ணைக் கொடுத்து வைத்து இருக்கிறேன். தேவைப்படுவோர் அழைப்பார்கள். போய் சாக்குப் பைகள் தைத்துக் கொடுத்துவிட்டு பணம் சம்பாதிக்கிறேன்.

“ஆண்டில் ஆறுமாத காலம் அசையக்கூட முடியாதபடி வேலை இருக்கும். இதர ஆறு மாத காலம் வேறு ஏதாவது வேலைகளைப் பார்ப்பேன்,” என்று மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான திரு தர்மேந்திரன் குறிப்பிட்டார்.

திரு தர்மேந்திரனின் குடும்பம் கும்பகோணத்தில் வசிக்கிறது. மூன்று பிள்ளைகளும் தொடக்கப் பள்ளியில் படிக்கிறார்கள். இவருடைய மனைவி இல்லத்தரசியாக இருக்கிறார்.

“டெல்டா பகுதிகளில் நெல், உளுந்து, பயறு பயிரிடும் பெரிய பெரிய விவசாயிகள் பலர் இருக்கிறார்கள். உளுந்து, பயறு, நெல் ஆகியவற்றை மூட்டையாகக் கட்ட சாக்குப் பைகளை அவர்கள் பயன்படுத்துவார்கள்.

“அவர்களிடம் நூற்றுக்கணக்கான சணல் சாக்குப் பைகள் இருக்கும். அவற்றை எலிகள் கடித்து கிழித்து ஓட்டையாக்கிவிடும். அந்தச் சாக்குப் பைகளைக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு தடவையாவது தைத்து, கிழிசல்களைச் சரிப்படுத்துவார்கள்.

“அதற்காக என்னை அழைப்பார்கள். நானும் தொடர்புகொண்டு வேலை இருக்கிறதா வரலாமா என்று கேட்பேன்.

“சில நேரங்களில் ஐந்நூறு, ஆயிரம் சாக்குப் பைகளைத் தைத்துச் சரிசெய்ய வேண்டி இருக்கும். நெல் வெளியே கொட்டாதபடி ஒரு பையில் உள்ள கிழிசலைத் தைத்துச் சரிசெய்துகொடுக்க ரூ.2 அல்லது ரூ.3 கூலி. அதேபோல் பிளாஸ்டிக் பைகளையும் தைப்பது உண்டு.

“தமிழ்நாடு முழுவதும் செயல்படும் சாக்கு மண்டிகளுக்கு, டெல்டா பகுதிகளைச் சேர்ந்த பெரிய பெரிய விவசாயிகளுக்கு என்னைப் போன்ற சாக்குத் தைப்போரின் விவரங்கள் தெரியும். அவர்கள் தவறாமல் அழைப்பார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

“பழைய சாக்குகளை வாங்கி சொந்தமாகத் தொழில் செய்யலாம். ஆனால், அதற்கு அலைய வேண்டும். மளிகைக் கடைகள், சந்தைகள், நெல் பிடிக்கும் நிலையங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று பயன்படுத்திய சாக்குப் பைகளை வாங்கிவர வேண்டும்.

“சில நேரங்களில் அதிகமாகக் கிடைக்காது. பெரிய அளவில் சாக்கு மண்டி வைத்து லட்சக்கணக்கில் பணம் கொடுத்து லாரி லாரியாக டன் கணக்கில் பழைய சாக்குப் பைகளை வாங்கி தொழில் நடத்தும் அளவுக்கு எனது சூழல் இல்லை.

‘‘நான் சிறு வயது முதலே இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டேன். கைத்தொழிலை நல்ல முறையில் கற்றுக்கொண்ட எனக்கு சாக்கு தைப்பதற்கு தனிக்கருவி எதுவும் தேவையில்லை.

‘‘ஒரு குடைக்கம்பி இருந்தால் போதும், அதை ஊசியாக்கிவிடுவேன். அதேபோல, அந்தக் கால டிங்டாங் ஊசல் கடிகாரத்தில் இருக்கும் சுருள்கம்பியை நீட்டி அடித்து, அதில் 15 கத்திகள் தயார் செய்துவிடலாம். அது ஆயுளுக்கும் போதும்.

‘‘சாக்கு தைக்கும் தொழில் அளவுக்கு எனக்கு வேறு எந்தத் தொழிலும் அவ்வளவாகத் தெரியாது.

“சணல் சாக்கு தைக்கும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

“சணல் சாக்கிலிருந்து ஒருவகை தூசு கிளம்பும். தொடர்ந்து அதைச் சுவாசித்தால் சிலருக்கு மூச்சுப் பிரச்சினை வந்துவிடும்.

“ஆகையால், அறை போன்ற குறுகிய இடங்களில் இல்லாமல் காற்றோட்டமான இடங்களில் சாக்கு தைப்பது உடல்நலத்திற்கு நல்லது.

“ஊசியைக் குத்தி இழுக்கும்போது நம்முடைய உடல்பக்கம் ஊசி வந்துவிடாமல் கையை நீட்டி இழுக்க வேண்டும்.

‘‘ஒரு கிலோ சணல் கயிற்றைக்கொண்டு 100 தாட் பைகளை எந்தக் குறையும் இல்லாமல் தைத்துவிடலாம்.

‘‘பொதுவாக நெல், உளுந்து, பயற்றைப் பொறுத்தவரை சணல் சாக்குதான் நல்லது. பயறு கெடாமல் இருக்க சணல் சாக்கு உதவும்.

‘‘அப்படி பயன்படுத்தப்படும் சாக்குப் பைகள் கிழிந்து போனதும் தாட் போன்ற பருத்தி வைக்கக்கூடிய பெரிய பைகளைத் தயாரிக்கப் பயன்படுகின்றன .

‘‘அத்துடன், சணல் சாக்கின் பயன் ஏறக்குறைய முடிந்துவிடும். ஓரிரு முறை பயன்படுத்தப்பட்ட தாட் பைகளைக் கட்டுமான வேலையாள்கள் வாங்கிச் சென்றுவிடுவார்கள்.

‘‘புதிதாக போடப்படும் கான்கிரீட் தளங்களில் சணல் சாக்குகளைப் போட்டு வைத்தால் தண்ணீரைச் சாக்கு உறிஞ்சி வைத்துக்கொண்டு கான்கிரீட் ஈரப்பதத்துடன் தொடர்ந்து இருக்க உதவும்,’’ என்று திரு தர்மேந்திரன் விளக்கினார்.

கைத்தொழில் ஒன்றை திறமையாகக் கற்றுக்கொண்டு வல்லவரானால் அந்த வல்லவருக்குப் புல்லும் ஆயுதம் என்பதிலும் அதற்கு திரு தர்மேந்திரன் ஒரு நடமாடும் எடுத்துக்காட்டு என்பதிலும் ஐயமில்லை!

குறிப்புச் சொற்கள்