ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் இரு விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேசுவரத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில், வங்கக் கடலில் மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே இந்தக் கைது படலம் அரங்கேறி உள்ளது.
மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் ராமேசுவரத்தில் உள்ள மீனவர் பகுதிகளில் கொந்தளிப்பு நிலவுகிறது. அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒருபக்கம் இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்த, மற்றொரு பக்கம் அந்நாட்டு கடற்படையினரின் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்படையினர் நிகழ்த்தியுள்ள இந்த அத்துமீறல் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.
வங்கக்கடலில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என்ற நயவஞ்சக எண்ணத்துடன் தான் இலங்கை கடற்படையினர் இத்தகைய கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் சாடி உள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்கக்கோரி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

