நாகை: தமிழகத்தின் நாகப்பட்டினம், இலங்கையின் காங்கேசன்துறை பகுதிகளுக்கு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை சனிக்கிழமை ரத்தானது.
இச்சேவை தொடங்கிய அடுத்த நாளே ரத்து செய்யப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
முதற்கட்டமாக, இந்தச் சேவைக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாத காரணத்தால்தான் இரண்டாவது நாளே இச்சேவை ரத்தானதாகத் தெரிகிறது.
இதையடுத்து, வாரந்தோறும் இனி மூன்று நாள்கள் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் 150 பேர் வரை பயணம் செய்யலாம். ஆனால், சேவை தொடங்கிய இரண்டாவது நாளன்று ஏழு பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர்.
முதல் நாளன்று நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்ல 30 பேரும், இலங்கையில் இருந்து நாகை வருவதற்கு 26 பேரும் முன்பதிவு செய்திருந்தனர்.
பயணக் கட்டணம் அதிகமாக இருப்பதன் காரணமாக அதிக பயணிகள் ஆர்வம் காட்டவில்லை என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதேசமயம் விமானத்தில் அனுமதிக்கப்படுவதைக் காட்டிலும் அதிக பொருள்களை எடுத்துச் செல்ல முடியும் என்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இனி திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாள்கள் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் வாரம் முழுவதும் இயக்கப்பட வாய்ப்புள்ளது.