ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினர் 27 மீனவர்களைக் கைது செய்ததற்கு நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
இவர்கள் கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 27 மீனவர்களைக் கைது செய்தனர்.
இதனையடுத்து ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், 27 ராமேசுவரம் மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படைக்குக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை காலவரையறை அற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அந்த முடிவுக்கேற்ப, ராமேசுவரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கட்கிழமை காலை தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
அக்டோபர் 18ஆம் தேதி பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்து உள்ளனர்.
போராட்டம் தேவையற்றது: மத்திய அமைச்சர் முருகன்
மீனவர்களின் போராட்டம் குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறுகையில், “ராமேசுவரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தேவையற்றது,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகாண வேண்டும். தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய-இலங்கைக் குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இன்னும் இரு நாள்களில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவர்,” என்றார் அவர்.

