ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆதிக்கத்தால் 200 திரைப்படங்கள் முடக்கம்: அதிமுக புகார்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆதிக்கத்தால் 200 திரைப்படங்கள் முடக்கம்: அதிமுக புகார்

1 mins read
affec598-88f6-4ed5-b553-0e809a34d06d
அதிமுக ஆட்சியில் திரைப்படத் துறையில் வெளிப்படைத்தன்மை இருந்ததாக கடம்பூர் ராஜு தெரிவித்தார். - படம்: தமிழக ஊடகம்

கோவில்பட்டி: ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் ஆதிக்கத்தால் 200 திரைப்படங்கள் முடங்கி இருப்பதாக அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2006-2011 காலகட்டத்தில் குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே படங்களை வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது.

“2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021 வரை திரைப்படத் துறையில் வெளிப்படைத்தன்மை இருந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களை திரையிட முடியாத நிலை இருக்கிறது.

“இதற்குக் காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தனி நிறுவனத்தின் ஆதிக்கம்தான்.

“அதிமுக ஆட்சியில் பாரபட்சமின்றி முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சிறப்புக் காட்சி அனுமதி வழங்கப்பட்டது.

“லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குக்கூட அனுமதி மறுத்துள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்களைத் தெரிவித்தனர்.

“அதேநேரம், ஜெயிலர் படத்துக்கு அனுமதி வழங்கினர். தற்போது கண்டனம் காரணமாகவே, லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கி உள்ளனர். திரைப்படத் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்,” என்றார் கடம்பூர் ராஜு.

குறிப்புச் சொற்கள்