ஏழைகளைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்துக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் நடைபெற்ற மொய் விருந்தில் நடிகை ஐஸ்வர்யா கலந்து கொண்டார்.
அப்போது, இதுபோன்ற சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பவர்களைப் பாராட்டி ஊக்கம் அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
“உணவுக்கு வழியின்றித் தவிப்பவர்களைத் தேடிச்சென்று உதவ பெரிய மனம் வேண்டும். எனினும் இதற்காக நாம் 100, 200 ரூபாய்கூட அளிக்கத் தேவை இல்லை. வெறும் 35 ரூபாய் மட்டுமே நமது பங்களிப்பு.
“இவ்வாறு திரட்டப்படும் தொகை ஏழைகளைச் சென்றடையும். அதனால்தான் இந்நிகழ்வில் பங்கேற்றேன்,” என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
‘ஹெல்ப் ஆன் ஹங்கர்’ என்ற அமைப்பு கடந்த நான்கு ஆண்டுகளாக உணவின்றித் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
அந்த அமைப்பு ஏற்பாடு செய்த மொய் விருந்து நிகழ்ச்சியில் நடிகை சனம் ஷெட்டி, ஜெர்மனி அரசு ஆலோசகர் மைக்கேலா குச்லர், துணை ஆட்சியர் ப்ரீத்தி பார்கவி, நடிகர் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

