சென்னை: அனைத்து மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும். அனைவரும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்றே உதயநிதி பேசியுள்ளார் என்று சனாதனம் பேச்சு குறித்த வழக்கில் அமைச்சர் உதயநிதி சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி தரப்பிலும், சட்டப்பேரவைச் செயலர் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிவிட்டு எந்தத் தகுதியின் அடிப்படையில் மூவரும் மக்கள் பிரதிநிதிகளாக பதவியில் நீடிக்கின்றனர் என்பதை விளக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முன்னிலையாகி, மனுஸ்மிருதி, சனாதனம் ஆகியவற்றையும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் உத்தரவுகளையும் மேற்கோள்காட்டி வாதிட்டார்.
மக்களை சாதி, மத அடிப்படையில் பிரிக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அனைவரும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும்தான் உதயநிதி பேசியுள்ளார்.
பல ஆண்டுகளாக இந்தக் கொள்கை மோதல் நீடித்து வருகிறது. இறையாண்மைக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிராக பேசியதாக குற்றம் சாட்டும் மனுதாரர்கள் அதற்கான ஆதாரங்களை தெரிவிக்கவில்லை என்று வாதிட்டார்.
வழக்கு விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார். அன்றைய தினம் அந்த நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழ், அதில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உதயநிதி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.