தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓராண்டில் விமானம், கடல் வழி 120 கிலோ தங்கம் கடத்தல்

2 mins read
2c819fdd-ed8c-4f15-bdd1-602f64a5ae9a
பல்வேறு நூதன வழிகளைப் பின்பற்றி தமிழகத்துக்குள் தங்கம் கடத்தி வரப்படுகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கடல் வழியாக நூறு கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் விமானம் மூலம் 20 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்துக்கு கடத்தி வரப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்து வருகிறது. விமான நிலையங்களில் கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஏராளமானோர் தங்கம் கடத்தி வந்து பிடிபடுகின்றனர்.

அண்மையில் சென்னையில் உள்ள பாரிமுனை, சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடத்தல் தங்கம் விற்கப்படுவதாக ஒரு தகவல் வெளியானது.

இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் பலனாக கடந்த 13ஆம் தேதி சென்னையில் 11.80 கிலோ தங்கம் பிடிபட்டது.

தங்கம் உருக்கும் கடையில் இருந்து 3.3 கிலோ தங்கமும் திருச்சியில் இருந்து சென்னை வந்த காரில் 7.55 கிலோ தங்கமும் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் கடந்த 11ஆம் தேதியன்று சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது 2.97 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.

சவூதி அரேபியாவில் இருந்து கடத்தப்படும் தங்கம் முதலில் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அதன் பின்னர் மீன்பிடிப் படகுகள் மூலம் அவை தமிழகத்துக்குள் கடத்தி வரப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியதாக தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இதேபோல் கணக்கில் காட்டப்படாத ஹவாலா கறுப்புப் பணமும் அவ்வப்போது பறிமுதல் செய்யப்படுவதாக கூறும் அதிகாரிகள், அண்மையில் சென்னையில் உள்ள நகைக்கடையில் நடந்த சோதனையின்போது ரூ.1.50 கோடி ஹவாலா பணம் சிக்கியதாக கூறியுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்கம் சிக்கியுள்ளதாகவும் கடந்த ஓராண்டில் விமானம், கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 120 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் வழக்குகள் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்