சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது எனும் வெற்றிச் செய்திதான் தமிழ்நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் முழக்கமாக அமையும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 52 வது ஆண்டு விழாவையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ வேண்டிய சட்டமன்றமே புதைகுழியாக மாற்றப்படுகிறது என அவர் விமர்சித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு என்று திமுக அரசு மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி இருப்பதாகவும் எங்கெங்கு காணினும் கள்ளச் சாராயமும் கஞ்சா புழக்கமும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளையும் அதிமுக கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் கூறியிருப்பதை அடுத்து, அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாக அக்கட்சிப் பிரமுகர்கள் கூறுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அதிமுகவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.