சென்னை: குற்றச்செயல்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்றாக, மாநகரில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறுவதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றங்களையும் முற்றிலும் கட்டுப்படுத்துவதை காவல்துறை இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களின் எண்ணிக்கை, அவற்றுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப் படையில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்புக் கருவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

