மனுதாரர்களை நானே தொடர்புகொள்வேன்: முதல்வர்

மனுதாரர்களை நானே தொடர்புகொள்வேன்: முதல்வர்

2 mins read
afc73687-b36e-403f-a664-47c790de07a0
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் பெரிய அளவில் எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால்தான் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் இந்திய அளவில் முதன்மை மாநிலமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

அதில் பேசும்போது, குற்றச்செயல்களைத் தடுப்பதில் காவல்துறை அதிகபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கஞ்சா, போதைப்பொருள் புழங்கும் பகுதிகள் கண்டறியப்படும்போது, அப்பகுதி காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“அதேபோல், சமூக வலைத்தளங்களின் மூலம் வன்முறை மற்றும் சாதிய கருத்துகளையும் வதந்திகளை பரப்புபவர்களையும் கண்காணிக்க வேண்டும். பொய்யான செய்திகள் குறித்து பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

காவல் துறையின் மீது மக்களுக்கு நல்லெண்ணம், நம்பிக்கை ஏற்படுத்துவது காவல்துறையைச் சேர்ந்தவர்களின் பொறுப்பு என்றும் குற்றம் இழைத்தவர்களுக்கு விரைவாக உரிய தண்டனையைப் பெற்றுதர வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

“முதல்வரின் முகவரி’ திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மனுக்கள் தொடர்பாக, சில மனுதாரர்களை நானே நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வுகள் பற்றி கேட்டறிவதற்காக நான் முடிவு செய்திருக்கிறேன். எனவே, ஒவ்வொரு மனுவின் மீதும் முறையான விசாரணை நடைபெற வேண்டும்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்