தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக அரசை சாடும் ராமதாஸ்

2 mins read
995b0dbb-a912-4714-b738-ad93d9151b81
ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக மீனவர்களைத் தாக்கும் கடற்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.

மீனவர்கள் தாக்கப்படும் போது மத்திய அரசுக்கு முதல்வர் எழுதும் வழக்கமான கடிதத்தைத் தாண்டி இந்தச் சிக்கல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் ஒன்பது பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், மீன்பிடிக் கருவிகள் ஆகியவற்றையும் கொள்ளையடித்துள்ளனர்.

இலங்கை கடல் கொள்ளையர்களின் இந்த தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் ஒன்பது மீனவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் கோடியக்கரை அருகில் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றிவளைத்து கொடிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

“தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறைந்தது வாரத்துக்கு இரு முறையாவது தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்,” என்று ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

வங்கக் கடலில் அட்டகாசம் செய்யும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களைத்தாக்கி பொருட்களை கொள்ளையடிப்பதற்காக இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட கூலிப்படையினர் என்றும் அதில் சிங்களக் கடற்படையினரும் அங்கம் வகிப்பதாகக் கூறப்படுகிறது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு நினைத்தால் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்துக்கு ஒரு சில மணி நேரங்களில் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்