தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐநா விருது: தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு முதல்வர் பாராட்டு

1 mins read
9a0f95f3-86fc-4065-938f-03016ccc766c
ஐநா விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற விருது பெற்ற நாடுகளின் பிரதிநிதிகள். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு ஐநா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக ஐநா அமைப்பின் மதிப்புமிகு ‘முதலீட்டு ஊக்குவிப்பு விருதைப் பெறும் தொழில் வழிகாட்டி நிறுவனத்தைப் பாராட்டுவதாக அவர் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதுமையான அணுகுமுறைகளும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை என்று தமது பதிவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அவை பசுமையான எதிர்காலத்துக்கான ‘திராவிட மாடல்’ அரசின் உறுதியான ஈடுபாட்டைப் பறைசாற்றுவதாக அமைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசு அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும் என தமிழக அரசு நம்புகிறது.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனம் செய்து வருகிறது.

இந்நிலையில், அந்நிறுவனத்துக்கு ஐநா விருது கிடைத்திருப்பதை அடுத்து, தொழில் துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்