சென்னை: மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையால் சென்னையில் பரபரப்பு நிலவியது.
புதன்கிழமை இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுடன் தொடர்புடைய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றதாகவும் முப்பதுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
சென்னையில் இயங்கி வரும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களைக் குறிவைத்து இச்சோதனை நடைபெற்றதாகவும் வெளிநாடுகளுக்கு மருந்து பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்தியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிகிறது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை அதிகாலையிலேயே இந்தச் சோதனை நடவடிக்கை தொடங்கிவிட்டது.
இதனால் சோதனை நடைபெற்ற சென்னை ஆயிரம் விளக்கு, எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
இந்த நடவடிக்கையின்போது ஆவணங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டனவா என்பது தெரியவில்லை.
சோதனையும் விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுடன் தொடர்புள்ள பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.