திருப்பூர்: டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் பகுதியில் மதுப்பிரியர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக்கோரி கடந்த 10ஆம் தேதி அன்று அப்பகுதிப் பெண்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அப்போது உறுதி அளித்திருந்தனர்.
ஆனால், அக்குறிப்பிட்ட மதுக்கடையை அகற்றினால் தங்களது வணிகம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கூறுகின்றனர்.
கடையை அகற்றக்கூடாது என மதுப்பிரியர்களும் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


