தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ

2 mins read
62b19b1b-711c-48e7-a5a7-a93fee881843
இலங்கைக் கடற்படை, இலங்கைக் கடற்கொள்ளையர்கள் ஆகியோரால் தமிழ் நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ் நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரும் கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்துவதும் அவர்களின் உடைமைகளைப் பிடுங்கிக்கொள்வதும் வழக்கமாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

“ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்களைத் தாக்கி அவர்களுடைய பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும், இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கியும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களிடம் இருந்து மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, கைப்பேசி உள்ளிட்ட பொருள்களைப் பறித்துச் சென்றுள்ளனர்.

செப்டம்பர் 23 மற்றும் 25 தேதிகளிலும் அக்டோபர் 6 ஆம் தேதியும் செருதூர் மற்றும் வெள்ளப் பள்ளம் மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களின் பொருள்களை கொள்ளையடித்து சென்றனர்.

மீண்டும் அக்டோபர் 17ஆம் தேதி அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே பதினொரு நாட்டிக்கல் மைல் தொலைவில் இரண்டு படகுகளில் இருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், நமது மீனவர்களின் படகுகளில் ஏறி இரண்டு படகுகளிலும் இருந்த ஒன்பது மீனவர்களையும் கட்டை, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். அத்துடன் படகில் இருந்த திசைகாட்டும் கருவி, வாக்கி டாக்கி, டார்ச் லைட்கள், சிக்னல் கருவிகள், 600 கிலோ வலை மற்றும் பிடித்து வைத்திருந்த மீன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். காயமடைந்த மீனவர்களைக் கடலில் தள்ளி விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

“கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்களைக் கைது செய்து அவர்களுடைய ஐந்து படகுகளையும் இலங்கை கடற்படை பறித்துச் சென்றுள்ளது.

“இலங்கைக் கடற்கொள்ளையர்களும் இலங்கை கடற்படையினரும் தமிழ் நாட்டு மீனவர்களைத் தாக்குவதும் சிறைப்பிடிப்பதும் வழக்கமாகி உள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க முயற்சி எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்