சென்னை: தமிழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 60 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 5ஆம் தேதியன்று தமிழகத்தில் தங்குவிடுதிகள், கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம், நகைகள், மின்னிலக்கத் தரவுகள் உள்ளிட்ட ஏராளமான சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
எனினும், உறுதி செய்யப்பட்ட அறிவிப்பு எதையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.
இந்நிலையில், தமிழகத்திலும் புதுவையிலும் ரூ.60 கோடி மதிப்புள்ள நகை, ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை முதன்மை ஆணையரும் அத்துறையின் செய்தித் தொடர்பாளருமான சுரபி அலுவாலியா தெரிவித்துள்ளார்.
மேலும், கணக்கில் வராத ரூ.400 கோடிக்கும் அதிகமான கட்டண ரசீதுகளும், ரூ.25 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் சான்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அண்மையில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இம்மாதம் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதேபோல், சவீதா குழுமத்தின் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.