சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய 3,770 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தின்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிகுந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், பருவமழைக் காலத்தை எதிர்கொள்ள எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக பாதிப்புகளைச் சந்திக்க வாய்ப்புள்ள 4,399 இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
இந்நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 3,770ஆகக் குறைந்துள்ளது.
பேரிடர் வேளையில் தன்னார்வலர்களாகச் செயல்பட 1.56 லட்சம் பேர் முன்வந்துள்ளனர் என்றும் கடலோர மாவட்டங்களில் 1.13 லட்சம் பேரைத் தங்கவைக்கும் அளவில் இட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 59 விழுக்காடு அதிக மழை பெய்தது. சென்னையிலும் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், நடப்பாண்டில் திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில் பருவ மழையால் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

