குடும்பமே கொள்ளைக் கும்பலானது; ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணம் மீட்பு

குடும்பமே கொள்ளைக் கும்பலானது; ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணம் மீட்பு

1 mins read
49cf3671-7a74-4e1c-9549-ecccb9c2daca
காவல்துறை கைது செய்துள்ள நால்வர். - படம்: ஊடகம்

மதுரை: ஒரு குடும்பமே கொள்ளைக் கூட்டமாக செயல்பட்டு வந்ததாகவும் அவர்களில் நான்கு பேரை கைது செய்திருப்பதாகவும் மதுரை காவல்துறை தெரிவித்துள்ளது.

கொள்ளையடித்த பணத்தை அக்குடும்பத்தினர் தங்கள் வீட்டைச் சுற்றி பள்ளம் தோண்டி புதைத்து வைத்தது தெரியவந்தது.

மதுரை மாவட்டத்தில் உள்ள சிலைமான், கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி வந்தன. இந்த வழக்குகள் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.

பெரும்பாலான சம்பவங்களில் கொள்ளையர்கள் வீடு புகுந்து பொருள்களை கொள்ளையடித்திருந்தனர். இக்கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையின்போது சிலைமான் பகுதியில் நான்கு பேரை தனிப்படையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் குடும்பமாக கொள்ளையடித்தது தெரியவந்தது.

கைதானவர்களில் இருவர் சகோதரர்கள் ஆவர். இவர் களின் பெரியம்மா, அவரது மகன் ஆகிய இருவரும் பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் 30 கொள்ளை வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு உள்ளது உறுதியானது. கொள்ளையடித்த நகை, பணத்தை வைத்து புதிதாக இடம், வாகனங்கள் வாங்கி இருப்பதும் நகைகளை வீட்டைச் சுற்றி புதைத்து வைத்ததும் அம்பலமாகி உள்ளது. அவற்றை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்