நெல்லை: இந்தியாவிலேயே முதல்முறையாக நவீன சிகிச்சை மூலம் 17 வயது மாணவியைக் காப்பாற்றி உள்ளனர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அம்மாணவி சிகிச்சைக்குப் பின் இயல்புநிலைக்குத் திரும்பி உள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதிபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அரசுப் பள்ளியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில், அங்கு பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது என்றும் இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் மருத்துவர் ரேவதி குறிப்பிட்டார்.
இந்நிலையில், அம்மாணவிக்கு திடீரெனத் தலைவலி, நெஞ்சு வலி ஏற்பட்டது என்று தெரிவித்த அவர், பார்வையிழப்பும் ஏற்பட்டதை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.
அந்த மாணவிக்கு இதய ரத்தக் குழாயில் நூறு விழுக்காடு அடைப்பு இருப்பதை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவர் ரவிச்சந்திரன் எட்வின் தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர்.
“இதையடுத்து, ‘பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட்’ என்ற நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு, அம்மாணவி காப்பாற்றப்பட்டார். தற்போது அவரது ரத்த அழுத்தமும் சீராக உள்ளது. மாணவி இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளார்.
“பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு கிராம்போ லைசிஸ் என்ற மருந்துகொடுக்கப்பட்டு, அதன் பின்னர் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும், ஆனால் இந்த மாணவிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், இந்தியாவிலேயே முதல்முறையாக கிராம்போ லைசிஸ் மருந்து கொடுக்காமல், சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தி உள்ளனர்,” என்றார் மருத்துவர் ரேவதிபாலன்.
அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.


