பொள்ளாச்சி: வால்பாறைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் அங்குள்ள நல்லகாத்து ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பத்து பேர் வால்பாறைக்கு சுற்றுலா மேற்கொண்டனர்.
அங்குள்ள சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ந்த மாணவர்கள் இறுதியாக சோலையாறு அருகே உள்ள நல்லகாத்து ஆற்றில் குளித்தனர். அப்போது சில மாணவர்கள் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டனர்.
ஒரு மாணவர் தண்ணீரில் ஏற்பட்ட சுழலில் சிக்கி தத்தளிக்க, அதைக் கண்ட நான்கு மாணவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். எனினும், அவர்களும் தண்ணீர் சுழலில் சிக்க நேரிட்டது. இறுதியில் ஐந்து பேரும் தண்ணீரில் மூழ்கிப் பலியாகினர்.
அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் பணியாற்றும் சிலர், மாணவர்களைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து வால்பாறை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக ஏசியா தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இறந்துபோன மாணவர்களில் இருவர் சகோதரர்கள் என்று தெரியவந்துள்ளது.

