சென்னை: தமிழகத்திலும் கேரளாவிலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற்றுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
“அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் புயல் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். இதனால் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
அக்டோபர் 26ஆம் தேதி வரை வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரை திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்றார் பாலச்சந்திரன்.

