சென்னை: மாவட்ட ஆட்சியர் அனைவரும் நாள்தோறும் காலையில் நாளேடுகளைப் படிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆட்சியர்களும் உயரதிகாரிகளும் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, ஆட்சியர்கள் ஊடகச் செய்திகளை நாள்தோறும் பார்த்தால்தான், நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்றார்.
மேலும், அன்றாடம் நாளேடுகளைப் படிப்பதுதான் ஆட்சியர்களின் முதல் பணியாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
“குறிப்பாக, உங்கள் மாவட்டத்தில் என்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை நீங்கள் உடனடியாக புரிந்துகொள்ள முடியும். செய்திகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு உடனே தீர்வுகாண வேண்டும்.
“மேலும், எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

