சென்னை: மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தி உடல்நலத்தைப் பேணும் விதமாக ‘நல நடைபாதை’ (ஹெல்த் வாக் சாலை) என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்கிறது.
எதிர்வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைப்பார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், பொதுமக்கள் எட்டு கிலோ மீட்டர் தூரம் நடப்பதற்கான தனிப்பட்ட சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் நாள்தோறும் எட்டு கிலோ மீட்டர் தூரம் நடப்பது சுகாதார விதிமுறைகளில் ஒன்று என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
“ஜப்பான் தலைநகர் தோக்கியோ சென்றிருந்தபோது அங்கு எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ‘நல நடைபாதை’ (ஹெல்த் வாக் சாலை) அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டபோது மக்களிடையே நடைப்பயிற்சி, மெதுவோட்டம் (ஜாகிங்) பழக்கத்தை உருவாக்க அந்தச் சாலை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
“எட்டு கிலோ மீட்டர் தூரம் நடக்கும்போது 10,000 அடிகள் (ஸ்டெப்ஸ்) வரும் என்றும் பத்தாயிரம் அடிகள் என்பது நாள்தோறும் ஒரு மனிதர் நடக்க வேண்டிய தூரம் என சுகாதார விதிகள் கூறுகின்றன என்றும் குறிப்பிட்டனர்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
நாள்தோறும் பத்தாயிரம் அடிகள் கொண்ட நடைப்பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கு நல்லது என்றும் குறிப்பாக இதயத்துக்கு நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த நல்ல திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அதன் பலனாக 38 மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“இதன் மூலம் நடைப்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் எட்டு கிலோ மீட்டர் சாலைகள் தேர்வு செய்யப்படும். சாலையின் இருபுறங்களிலும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படும்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இது தமிழக மருத்துவத் துறையின் மற்றொரு மகத்தான திட்டம் என்றும் நவம்பர் 4ஆம் தேதி காலை ஆறு மணிக்கு இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் நடைப்பயிற்சி மேற்கொள்வார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
‘நடப்போம் நலம்பெறுவோம்’ என்ற கருப்பொருளுடன் கூடிய அந்த 8 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி தூத்துக்குடியில் நடைபெற்றது.

