திமுக கூட்டணியில் இருந்து விலகவில்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் இருந்து விலகவில்லை: திருமாவளவன்

1 mins read
ca2a86ff-6cda-4037-a207-a7db39c54916
திருமாவளவன். - படம்: ஊடகம்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணியில் இணையப் போவதாக வெளியான தகவலை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் மறுத்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதையடுத்து அதிமுக அமைக்க உள்ள புதிய கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணையும் என அண்மையில் தகவல் பரவியது.

தமது உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும் இதைப் பயன்படுத்தி சிலர் திமுக கூட்டணியை பலவீனமாக்குவதற்காக வதந்திகளைப் பரப்பியதாக திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கூட்டணியின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் முழுமையாக உழைக்கும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது. அதுவே நமது சபதம்,” கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.

திமுக, இண்டியா கூட்டணியை பலவீனப்படுத்தும் எத்தகைய முயற்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கைகொடுக்காது என்றும் இம்முடிவில் கட்சி உறுதியாக உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோர்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.

இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைமையுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்