சென்னை: நீட் நுழைவுத் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டினால் ஜல்லிக்கட்டு போன்ற போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சர் உதயநிதி எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் இன்னொரு மரணம் நிகழக்கூடாது என்று திமுக இளையரணி கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“மத்திய அரசு நமது மாநில அரசின் முயற்சிகளை தொடர்ந்து அலட்சியம் செய்து கொண்டிருந்தால், அடுத்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போன்ற வீரமிக்க போராட்டத்தைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
“தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் கல்வி உரிமைக்காகவும் நீட் விலக்குக்காகவும் திமுக முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்தில் அதிமுக பங்கு கொள்ள வேண்டும்,” என உதயநிதி வலியுறுத்தினார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது அதிமுகவால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் தற்போது அக்கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டதாக கூறுவதால் தாம் அதிமுகவிடம் கோரிக்கை விடுக்க நேரிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அதிமுகவினரும் திரண்டு வாருங்கள். நீட் ஒழிப்புக்காக சேர்ந்து போராடலாம். அனைத்து இயக்கத்தினரும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும். மின்னிலக்க முறையிலும் அஞ்சல் மூலமாகவும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கலாம். நீட் விலக்கு திமுகவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. நீட் தேர்வை அனைவரும் எதிர்க்க வேண்டும்,” என்று அமைச்சர் உதயநிதி மேலும் வலியுறுத்தினார்.