தேனி: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரை தேனி மாவட்ட காவல்துறையின் உதவியோடு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
உத்தமபாளையம் பகுதியில் பதுங்கி இருந்த இம்ரான்கான் கடந்த ஓராண்டாக தங்குவிடுதி ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில், இலங்கையைச் சேர்ந்த சிலர், சட்ட விரோதமாக தங்கி உள்ளதாக அம்மாநில உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மங்களூரு காவல்துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது 38 பேர் பிடிபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் மாயமானார். பின்னர் நடைபெற்ற விசாரணையின்போது, தப்பியோடியவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 39 வயதான இம்ரான்கான் என்பது தெரியவந்தது.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட அம்முகமை அதிகாரிகள், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையத்தில் இம்ரான்கான் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இரு தினங்களுக்கு முன்பே அவரைக் கைது செய்துவிட்டதாகவும் அறிவித்துள்ளனர்.
போலி கடப்பிதழ்களைத் தயார் செய்து, அதன் மூலம் ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார் இம்ரான்கான். அனைத்துலக அளவில் தேடப்படும் குற்றவாளி என்றும் விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஈசன் என்பவருடன் இம்ரான்கான் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் என்றும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பலரை போலி கடப்பிதழ்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ள இம்ரான்கான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான இம்ரான்கான், இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்களை மூளைச்சலவை செய்து பாகிஸ்தான் அழைத்துச் சென்றுள்ளார் என்றும் அங்கு பயங்கரவாத பயிற்சி பெற வைத்து மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார் என தினமலர் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. அவரிடம் விசாரணை நீடித்து வருகிறது.


