திருவாரூர்: வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்களை அரிவாளைக் காட்டி விரட்டியடித்த 83 வயது முதியவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைரக்கண்ணு. 83 வயதான இவர், தன் மருமகள் ஜெயலட்சுமியுடன் வசித்து வருகிறார்.
வைரக்கண்ணுவின் மகன் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். மருமகள், பேத்திக்கு துணையாக இருந்து வரும் வைரக்கண்ணு சனிக்கிழமை இரவு வழக்கம்போல் தன் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த நான்கு முகமூடி கொள்ளையர்கள் மருமகள் ஜெயலட்சுமியை மிரட்டி அவர் அணிந்திருந்த தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளைப் பறித்தனர். அப்போது நகைகளைக் கொடுக்க வேண்டாம் என மருமகளை நோக்கி வைரக்கண்ணு கூறியதால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்களில் ஒருவன், தன் கையில் இருந்த கத்தியைக் கொண்டு முதியவரை குத்துவதுபோல் மிரட்டினான்.
இதைக் கண்டு வைரக்கண்ணு பயப்படவில்லை. மாறாக, ஆவேசத்துடன் அந்தக் கொள்ளையனை தள்ளிவிட்ட அவர், வீட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொள்ளையர்களை நோக்கி சுழற்றினார்.
இதை சற்றும் எதிர்பாராத கொள்ளையர்கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், முதியவர் வைரக்கண்ணு அசராமல் அரிவாளை சுழற்றியபடியே கொள்ளையர்களை நோக்கி சென்றார்.
அவரது மருமகள் உதவி கேட்டு கூக்குரல் எழுப்ப, அண்டை வீட்டார் ஓடி வந்தனர். இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளை ஆராய்ந்ததில் கொள்ளையர்களை அடையாளம் காண முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
கொள்ளையர்கள் நான்கு பேரும் கொள்ளை முயற்சிக்கு மறுநாள் ஒரு கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், முதியவர் வைரக்கண்ணு வீட்டில் கொள்ளையடிக்க முயன்றது அவர்கள்தான் எனத் தெரியவந்தது.
முதியவரின் துணிச்சலான செயல்பாட்டால் தப்பி ஓட நேர்ந்ததாக நால்வரும் தெரிவித்தனர். முதியவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

