டெங்கி பாதிப்பை உடனடியாகக் கண்டறிய கையடக்கக் கருவி: தமிழக அரசு, ஐஐடி கல்வி நிலையம் கூட்டு ஆராய்ச்சி

டெங்கி பாதிப்பை உடனடியாகக் கண்டறிய கையடக்கக் கருவி: தமிழக அரசு, ஐஐடி கல்வி நிலையம் கூட்டு ஆராய்ச்சி

படம்: ஊடகம்

24 Oct 2023 - 7:50 pm

1 mins read

சென்னை: டெங்கிக் காய்ச்சல் பாதிப்பை உடனடியாகக் கண்டறியும் கையடக்கக் கருவியை உருவாக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இம்முயற்சியில் ஐஐடி கல்வி நிலையம் அரசுடன் கைகோத்துள்ளது.

சென்னை போன்ற பெரிய நகரங்களில் டெங்கி பாதிப்பை உடனடியாகக் கண்டறிய போதிய வசதிகள் உள்ளன. ஆனால் சிற்றூர்களிலும் கிராமப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

அங்கிருந்து பரிசோதனை முடிவுகள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றன. அதன் பின்னரே, டெங்கி பாதிப்புக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தக் கால தாமதத்தை தவிர்க்கும் நோக்கத்தில் டெங்கி பாதிப்பை உடனடியாக் கண்டறியும் கையடக்கக் கருவியை உருவாக்கும் ஆராய்ச்சியில், தமிழக அரசின், ‘டேன்சம்’ எனப்படும், தமிழக நுண்திறன் மற்றும் மேம்பட்ட முறைக்கான திறன்மிகு மையம் ஈடுபட்டுள்ளதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இம்மையம் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிலையத்துடன் இணைந்து புதிய கருவியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது.

“புதிய கையடக்கக் கருவி செயல்பாட்டு வரும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள சிற்றூர்கள், மலைக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
டெங்கி