விமானக் கழிப்பறையில் ஒளித்து வைக்கப்பட்ட 2.4 கிலோ தங்கம்; கடத்தியவர்களைப் பிடிக்க நடவடிக்கை

விமானக் கழிப்பறையில் ஒளித்து வைக்கப்பட்ட 2.4 கிலோ தங்கம்; கடத்தியவர்களைப் பிடிக்க நடவடிக்கை

படம்: ஊடகம்

24 Oct 2023 - 8:40 pm

1 mins read

சென்னை: விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.4 கிலோ தங்கம் திங்கட்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

அபுதாபியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தை சுத்தப்படுத்திய ஊழியர்கள் கழிப்பறை, தண்ணீர் தொட்டியில் பெரிய உறை இருப்பதைக் கண்டு விமான நிலைய மேலாளருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் அந்த உறையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் 2.4 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.1.5 கோடி என்று அவர்கள் தெரிவித்தனர்.

தங்கத்தைக் கடத்தி வந்த இரண்டு பயணிகளில் ஒருவர் அதைக் கழிப்பறை தண்ணீர்த் தொட்டியில் மறைத்து வைத்துள்ளார். அந்த விமானம் அடுத்து சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல இருந்தது.

கடத்தலில் ஈடுபட்ட அந்த இரண்டாவது பயணி ஹைதராபாத்தில் தரையிறங்கியதும் கடத்தல் தங்கத்தை எடுத்துச் செல்வதுதான் அவர்களது திட்டம் என்பது தெரிய வந்துள்ளது. இரண்டு பயணிகளையும் கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளை வைத்து அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கடத்தல்