தஞ்சாவூர்: கன்றுக்குட்டியை ஏற்றிச்சென்ற வாகனத்தை தாய்ப் பசு விரட்டிச் சென்றது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
தஞ்சாவூர், செக்கடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சபரிநாதன் வளர்த்து வரும் லட்சுமி என்ற பசு இரு தினங்களுக்கு முன்பு கன்றுக்குட்டியை ஈன்றது.
மேய்ச்சலுக்காக சென்ற இடத்தில் லட்சுமி பசு கன்று ஈன்றதை அறிந்த சபரிநாதன் விரைந்து சென்று கன்றுக்குட்டியை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு சென்றார்.
ஈன்றெடுத்த சில நிமிடங்களில் கன்றுக்குட்டியைப் பிரிய மனமில்லாத அந்த தாய்ப் பசு, ஆட்டோவை பின்தொடர்ந்து ஓடி வந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் ஆட்டோவை முந்திச்சென்று, அதை மறித்து நின்றது. இதையடுத்து சபரிநாதன் கன்றுக்குட்டியை கீழே இறக்கிவிட, உடனடியாக அதற்கு பாலூட்டியது தாய்ப் பசு. தாய்ப் பசுவின் இந்தப் பாசப் போராட்டம், காண்போரை நெகிழ வைத்தது.