தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் பகுதியில் அமைய உள்ள புதிய ராக்கெட் ஏவுதளத்துக்குப் பிரதமர் மோடி விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் பிரதமர் மோடி இதற்காக தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்காக அப்பகுதியில் உள்ள கூடல் நகர், அமராபுரம், மணப்பாடு, மாதவன் குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 2,100 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தப்படுத்தி உள்ளதாக ஊடகத் தகல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அந்த இடங்களைச் சுற்றி இரும்புக் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தகட்டமாக அங்கு ரூ.6 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெறும் என்றும் ஏசியா நெட் தமிழ் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த எடைகொண்ட சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவ குலசேகரப்பட்டினம் ஏவுதளம் மிகப் பொருத்தமானதாக அமையும் என்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான செலவு குறையும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதை மனதிற்கொண்டே இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் பகுதியைத் தேர்வு செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தாவன் விண்வெளி ஆய்வு மையத்தையொட்டி இரு ராக்கெட் ஏவு தளங்கள் செயல்பட்டு வருகின்றன.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளதால் அத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தர உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், குலசேகரபட்டினம் அருகே புதிய ராக்கெட் தொழிற்நுட்ப கல்லுாரி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அத்திட்டம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக மக்களைக் கவரும் வகையில் வேறு பல திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

