ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் நீட்தேர்வை நீக்கக்கோரி ஓசூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஓசூர் ரயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கையெ ழுத்திட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர், துணை மேயர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகளுடன் ஏராளமான பொதுமக்களும் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்திட்டனர்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்துப் போட்டு தொடங்கி வைத்தார். நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி கையில் எடுத்துள்ளது.
“நீட் விலக்கு நம் இலக்கு” என்ற திமுகவின் கையெழுத்து இயக்க துவக்க விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உருக்கமாகவும் காரசாரமாகவும் பேசிய பேச்சு இணையத்தில் பரவி வருகிறது.