சென்னை: “நாடு விடுதலை பெறுவதற்காகப் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து சிறை சென்ற வீரர்களையும் தியாகிகளையும் பெருமைப்படுத்தி வரும் தமிழ் நாடு அரசின் கொள்கைக்கு எதிராக பகைமையையும் வெறுப்புணர்ச்சியை பரப்பி வருகிறார் ஆளுநர் ஆர்.என்ரவி.
“தரம் தாழ்ந்த பிரசாரகராக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவி, கூட்டாட்சிக் கோட்பாட்டினை தகர்த்து வருகிறார்,” என்று சாடியுள்ளார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ் நாட்டின் ஆளுநர், சட்டத்தின் ஆட்சி முறைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
“ஆளுநராக அவர் பொறுப்பேற்றது முதல் மக்களாட்சியின் மாண்பையும் மரபையும் அலட்சியப்படுத்தி வருகிறார். தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் மறுத்து வருகிறார்.
“வழிவழியாகப் பின்பற்றி வரும் மரபுக்கு மாறாக விளக்கம் பெறுதல் என்ற பெயரில் மசோதாக்களை திருப்பி அனுப்பிவைக்கிறார்.
“தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டும் ஒப்புதல் அளிக்காமல் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
“நீட் தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்குக் கோரும் மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“நீட் காரணமாக தமிழ் நாட்டு மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வெறும் கனவாகப் போய்விடுகிறது. அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்குத் தள்ளப்படுகின்றனர்.
“மக்களால் புறக்கணிக்கப்படும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைகளை துணை வேந்தர்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
“அறிவுத்துறை உலகம் ஆயிரம் ஆண்டுகளில் தலைசிறந்த பேரறிவாளர் என்று அறிவித்த காரல் மார்க்ஸ் சிந்தனைகளை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.
“மதவெறி, சாதிய ஆதிக்க உணர்வோடு செயல்படும் அமைப்புகளின் எதிர்மறை விளைவுகள் குறித்து வாய் திறக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, அமைதி நிலையை பாதுகாத்து வரும் தமிழ் நாடு அரசின் நடவடிக்கையை விமர்சித்து அடிப்படையற்ற அவதூறுகள் பரப்பி வருகிறார்.
“இவ்வாறு மலிவான அரசியலில் ஈடுபட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் சட்டவிரோத, அநாகரிக செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

