தமிழகத்தில் மாரடைப்பு அதிகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மாரடைப்பு அதிகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

படம்: தமிழக ஊடகம்

25 Oct 2023 - 7:34 pm

1 mins read

சென்னை: கொவிட்-19 கொள்ளைநோய்க்குப் பிறகு தமிழகத்தில் மாரடைப்பு அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் ‘நல நடைபாதை’ (ஹெல்த் வாக்) சாலையை ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் நீளமுள்ள ‘ஹெல்த் வாக்’ சாலை தொடங்கப்படவுள்ளது. பெசன்ட் நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

“நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் வசதிக்காக காலை 5 முதல் 8 மணி வரை பெசன் நகர் அவென்யூ சாலைகளில் கனரக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையின் சார்பில் ‘ஹெல்த் வாக்’ நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது.

“கொவிட்-19 கொள்ளைநோய் காலத்திற்குப் பிறகு அண்மைக்காலமாக இளம் வயதினர் உள்பட பலருக்கு மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் இளம்வயது மரணங்களை தடுப்பதற்கு அரசின் இந்த சீரிய ஏற்பாடு உதவக்கூடும்.

“நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அதற்கு அவசியம். எட்டு கிலோ மீட்டர் தூரம் நடக்கும்போது 10,000 காலடிகள் (ஸ்டெப்ஸ்) வரும். இது நாள்தோறும் ஒரு மனிதர் நடக்கவேண்டிய தூரம் என சுகாதார விதிகள் கூறுகின்றன,” என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

குறிப்புச் சொற்கள்
டெங்கி