தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி கோலகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் வண்ண விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (25ஆம் தேதி) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத சதய நாளாகிய புதன்கிழமை காலை மங்கள இசையுடன் தொடங்கிய இந்த விழாவில், கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரச தலைவர்களுடன் 70க்கும் அதிகமான அமைப்புகளைச் சேர்ந்த பலரும் மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர்.
யானை மீது திருமுறைகளை வைத்து மங்கல இசைக் கருவிகள், சிவகணங்கள் முழங்க திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 48 ஓதுவார்கள் கலந்து கொண்டு திருமுறைப்பண்களைப் பாடி வந்தனர்.
புதன்கிழமை காலை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் புலத் தலைவர் கோ.தெய்வநாயகம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கம், கவியரங்கம், மங்கள இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, நாத சங்கமம், சுகிசிவத்தின் பட்டிமன்றம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இருநாட்களாக நடைபெற்று வருகின்றன.
தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1003ஆம் ஆண்டு கட்டத்தொடங்கி 1010ஆம் ஆண்டு கட்டி முடித்தார். இதன் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கடந்த 2010-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது தஞ்சை பெரிய கோவிலில் ஒரே நேரத்தில் 1000 பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு 13 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை 1,038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் தஞ்சை, திருச்சி, கோவை, சென்னை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயரைக் கொண்ட ராஜராஜ சோழன், சுந்தர சோழன் எனும் இரண்டாம் பரகேசரிக்கும் வானவன் மாதேவிக்கும் 947ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்கிறது வரலாறு. அதே சதய நட்சத்திரத்தில் 985ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று 1014ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான் என்கிறது வரலாறு.
தொடர்புடைய செய்திகள்
சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவன் ராஜராஜன். தஞ்சை கோயிலைக் கட்டவும் அங்கு வழிபாடுகள் நடக்கவும் ஒரு பொன் காசு கொடுத்தவர்களைக்கூட மறக்காமல் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளார் ராஜ ராஜ சோழன்.
பொன்னியின் செல்வன் என்பது உள்ளிட்ட 40க்கும் அதிகமான சிறப்புப் பெயர்களால் போற்றப்படுபவர் ராஜராஜன். அதனால்தான் அவரது புகழ் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் போற்றப்படுகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூடிய 985ஆம் ஆண்டை அடிப்படையாகக்கொண்டு, பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நட்சத்திரத்தன்று சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

