கோவை: ஆளுநர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
கோவை விமான நிலையத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருச்சியில் ஒரு விழாவில் பேசினார். தமிழகத்தில் சுதந்திரத்துக்காக போராடிய வீரர்கள் சாதி முத்திரையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்றும் தேசிய தலைவர்களாக அவர்கள் உருவெடுக்கவில்லை என்றும் ஆளுநர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது உண்மைதான்.
“1967ல் இருந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முக்கியமான தலைவர்களுக்கு சாதி முத்திரை குத்தி, ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்துள்ளனர்.
“இன்றளவும் தென்தமிழகத்தில் குருபூஜைக்குச் சென்றால், 10,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எல்லாவற்றையும் சாதியாக மாற்றி, சாதிக் கலவரம் வருமளவுக்கு திமுக அரசு மாற்றி வைத்திருக்கிறது.
“அதனால்தான் ஒவ்வொரு குரு பூஜைக்கும் செல்வது ஒரு போர்க்களத்துக்கு செல்வது போன்று உள்ளது. நான் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்தமிழகத்தில் நிறைய குருபூஜை விழாக்களுக்குச் செல்கிறேன்.
“ஒவ்வொரு முறையும் மதுரை விமான நிலையத்தில் இருந்து தொடங்கி, குருபூஜை விழா நடைபெறும் இடம் வரை 25 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்படுகிறது. மக்கள் யாரும் வரக்கூடாது என்பதற்காக 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
“இப்படி தலைவர்களுக்கு சாதி முத்திரை குத்தி, சாதி கலவரம் ஏற்படும் நிலையை ஏற்படுத்தியது திமுக. ஆளுநர் இப்படி கூறியதில் என்ன தவறு இருக்கிறது?,” என்றார் அவர்.

