தெருவில் மாடுகளைப் பிடிக்கும் பணியில் காவல்துறை

தெருவில் மாடுகளைப் பிடிக்கும் பணியில் காவல்துறை

1 mins read
3dfbc017-4398-49dc-a0eb-5ec6ba853796
தெருவில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிபட்டால், அவற்றின் உரிமையாளருக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் காவல்துறையினரும் இணைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஆயிஷா என்ற பள்ளிச் சிறுமியை தெருவில் சுற்றித்திரிந்துகொண்டு இருந்த மாடு முட்டித் தள்ளியது. இதில் அந்தச் சிறுமி காயங்களுடன் உயிர்தப்பினார்.

தொடர்ந்து, இம்மாதம் 18ஆம் தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெருவில் நடந்து சென்ற சுந்தரம் என்ற 80 வயது முதியவரை மாடு ஒன்று முட்டித் தள்ளியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து தெருவில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளைப் பிடிக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது இந்தப் பணியில் காவல்துறையும் கைகோத்து உள்ளது. சாலையில் அல்லது தெருவில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்கும் காவல்துறையினர், அந்த மாடுகளின் உரிமையாளர் மீது நேரடியாக அவர்களே வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

மாட்டின் உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பிடிக்கப்படும் மாடுகள் மாநகராட்சி கால்நடை காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்