புதுக்கோட்டை: ஆளுநர் மாளிகை உள்ள சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் திமுக அரசின் பெயரைக் கெடுப்பதற்காக யாரோ செய்த சதியாகவே கருதுவதாக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டவர் உடனே கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது.
சாலையில் நடந்து சென்ற அந்த ஆடவர் அதை வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் எந்த உளவுத்துறை தோல்வியும் இல்லை. இதை வைத்து பாஜக அரசியல் செய்தாலும், அது தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது.
ஆளுநருடன் நாங்கள் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்தான் தமிழ் நாட்டின் பாஜக தலைவர் போல குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார், அதற்குப் பதில் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை, அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேறு யாரோ செய்த சதியாகவே கருதுகிறோம். ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசியவர் ஏற்கெனவே சிறையில் இருந்து விட்டு வந்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசியவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
“தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வைக் காட்டவில்லை. ஆளுநர்தான் தமிழ்நாடு மக்களிடம் வெறுப்புணர்வை பரப்பி வருகிறார். திமுக ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.
“பெட்ரோல் குண்டு வீச்சுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சாலையில் நடந்த சம்பவம். யாரோ ஒரு மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசியதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்.
“சாலையில் நடந்து சென்ற ஒருவர் வீசிய பெட்ரோல் குண்டு, ஆளுநர் மாளிகையின் வாசலுக்குக் கூட செல்லவில்லை. ஆளுநரை திமுக அரசு ஒருபோதும் அசிங்கப்படுத்த நினைக்கவில்லை. அவர் பேச்சுக்கு மட்டுமே பதில் அளிக்கிறோம். இச்சம்பவத்தில் கைதானவரிடம் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இரா முத்தரசன்
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேறு யாரோ செய்த சதியாகவே கருதுகிறோம் என்று அவர் கூறியுள்ளார். ஜனநாயக பண்புகளை மறந்த ஆளுநர் மலிவான அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார் எனவும் முத்தரசன் தெரிவித்தார்.

