சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அருகே, தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட கருக்கா வினோத் ஓராண்டாக சிறையில் இருந்ததாகவும், தனது விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதித்ததால், பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து மேலும் இரண்டு பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தை பாஜகவினரும் பாஜக ஆதரவாளர்களும் கண்டித்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆளுநர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “காவல் துறைக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான வன்முறையாக இருந்தாலும், அது கண்டிக்கத்தக்கது. திமுக அரசு இதை சும்மா விடாது. வன்முறையை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டம் பாயும்,” என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வருகை
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு சென்னை சென்றுள்ளார். அங்கு அவர், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கடல்சார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுப்பதால் அவருக்கு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை புகார்
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், “பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவுசெய்யவில்லை. தன்னிச்சையாக பதிவுசெய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசக்கார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டதாக ஆளுநர் மாளிகை நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
“அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். அதனால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

