காஞ்சிபுரம்: பரந்தூர் சுற்றுவட்டார 13 சிற்றூர்ப் பகுதிகளை உள்ளடக்கிய 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 13 சிற்றூர்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விமான நிலையம் அமைக்கப்பட்டால் விளைநிலங்கள், ஏரி, குளம், கால்வாய், மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படும் என்று கூறி ஏகனாபுரம் மக்கள் தொடர்ந்து ஓராண்டுக்கு மேல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏகனாபுரம் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் வகையில், தமிழ் நாடு அரசு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்து களஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் களஆய்வு செய்து வரும் உயர்மட்டக் குழுவினரைச் சந்தித்துத் தங்களின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும், இடிக்கப்பட்ட ஏகனாபுரம் நிர்வாக அலுவலகத்தை மீண்டும் கட்டித் தர வேண்டும் என்று போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் அறிவித்திருந்தனர். அதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் விவசாய நலக் கூட்டமைப்பின் போராட்டக் குழு செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் வந்த 20க்கும் மேற்பட்ட போராட்டக் குழுவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வியாழக்கிழமை நடந்த அந்தப் பேச்சுவார்த்தையில், உயர்மட்டக் குழுவினரைச் சந்திப்பதற்கும் சிற்றூர் நிர்வாக அலுவலகத்தை மீண்டும் கட்டித்தருவதற்கும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் உறுதியளித்தார். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

