சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள ரூ.2,696.77 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய வளர்ச்சித் துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ் நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தின் விவசாயம், தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழையையே பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், இவற்றில் மாறுபாடுகள் ஏற்படும் சூழலில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு அதிக தேவை ஏற்படுகிறது.
குறிப்பாக விவசாயம் நலிவடைந்த பருவத்தில், கிராமப்புறங்களில் உள்ள பலருக்கு கூடுதல் வாழ்வாதார வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதாலும், அவர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதாலும், அவர்களின் நிதிநிலை மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் மேம்பட்டுள்ளது என்று அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், திறன்சாரா தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து கூடுதல் நிதி விடுவிக்கப்பட வேண்டும், என்று அக்கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

