சென்னை: தமிழ் நாட்டில் இளையர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வை நீக்குவதற்கான சட்டமுன்வடிவு நகலை ஆளுநருக்கு அனுப்பி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். எனவே சுணக்கமின்றி தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சென்னை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, டெல்லி புறப்பட்டுச் செல்லும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இன்று (அக்.27) சந்தித்தார்.
ப்போது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள, தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு 2021-க்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென நேரில் வலியுறுத்திய முதல்வர், குடியரசுத் தலைவருக்கு, தான் எழுதியுள்ள கடிதத்தையும் வழங்கினார்.
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளது.
தமிழகத்தில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளது.
இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் கூறினார்.

