வைகோ: பாஜகவின் கூடாரமாக மாறி இருக்கிறது ஆளுநர் மாளிகை

வைகோ: பாஜகவின் கூடாரமாக மாறி இருக்கிறது ஆளுநர் மாளிகை

2 mins read
e3205e47-efb2-4087-82f3-1c363a5547a3
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் அம்மாளிகையின் அருகே ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். குற்றவாளி கைது செய்யப்பட்டாலும் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை தமிழ் நாடு அரசு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் பொதுக்கூட்டம் மற்றும் சமூக வலைத்தளம் வாயிலாக ஆளுநரைப் பற்றி மிரட்டும் வகையில் பேசி வருகின்றனர்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்,” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள இந்தச் செய்திக் குறிப்பு விஷமத்தனமான அரசியல் உள்நோக்கம் கொண்டது ஆகும் என்று மதிமுக தலைவர் வைகோ சாடியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதும், இந்துத்துவக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பதும், ஆளுநர் மாளிகையில் போட்டி அரசாங்கம் நடத்துவதைப் போல இயங்குவதும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய ஆளுநர், மரபுகளை மீறுவதால் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கிற வரம்புக்குள் நின்று ஆளுநர் செயல்பட்டால் விமர்சனங்கள் எழாது.

ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்குக் கருத்துரிமை இருக்கிறது என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய சட்ட முன் வரைவுகளுக்கு அனுமதி தராமல், தானடித்த மூப்பாக ஆளுநர் செயல்படுவது கண்டனத்துக்குரியதுதான்.

ஆனால் இதையெல்லாம் திசை திருப்புகிற வகையில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் மீது ஆளுநர் பழிபோட்டு இருப்பது, ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. திமுக கூட்டணிக் கட்சிகள் மீது பழி போடும் ஆளுநர் நோக்கம் முறியடிக்கப்படும்.

“தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி, தமிழ் நாட்டில் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சக்திகள் சூத்திரதாரியாக இருந்து ஆளுநரைப் பயன்படுத்துகின்றனர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என வைகோ தெரிவித்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்